ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.! எந்தெந்த கடன்களின் வட்டி விகிதம் அதிகரிக்கும்.?
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதம் உயர்த்திய காரணத்தால், அனைத்து வங்கிகளும் தங்கள் பயனர்களின் EMI தொகையினை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதமானது இந்திய பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை அதிகரிப்பதன் மூலம், கடன் வாங்கும் திறன் மறைமுகமாக குறைக்கப்பட்டு அதன் மூலம் பணவீக்கம் என்பது கட்டுப்படுத்த இந்த ரெப்போ வட்டி விகிதம் பயன்பெறுகிறது .
நாணய கொள்கை கூட்டம் : கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி இறுமாத நாணய கொள்கை கூட்டத்தை துவங்கியது. இந்த கூட்டம் நேற்று (பிப்ரவரி 8) நிறைவடைந்ததை அடுத்து, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
கணிப்பு : ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் நிறைவடையும் தருவாயில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக பொருளாதர நிபுணர்கள் கணித்தனர். அதே போலவே ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது .
6.25 முதல் 6.50 வரை : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதமானது 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளார். இதே போல ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த டிசம்பர் மாதம் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக உயர்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.
மாதாந்திர EMI : ரெப்போ வட்டி உயர்வினை அடுத்து வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதனால், வீட்டுக் கடன், பர்சனல் கடன், கார் கடன், பைக் கடன், கார்ப்பரேட் கடன், தொழில்துடங்குவதற்கான கடன், தங்கக் நகை கடன் வரையில் அனைத்திற்குமான வட்டி விகித்ததை அந்தந்த வங்கிகள் அதிகரிக்கும். இதன் மூலம் கடன் வாங்கியோரின் மாதாந்திர EMI தொகை அதிகரிக்கும்.
கொரோனா காலமாக 2 ஆண்டுகளாக ரெப்போ வட்டி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியானது, கடந்த 2022 ஆம் ஆண்டில் 5 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த 5 முறை வட்டி விகித உயர்வில் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது.