இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது – நத்தம் விஸ்வநாதன்
ஈரோட்டில் எத்தனை அமைச்சர்கள் முகாமிட்டாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை.
எதிர்பார்ப்பில் இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்று, இன்று வேட்புமனுக்களை மீதான பரிசீலனை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்புமனுக்களில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு:
இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக பிளவுப்படத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
அதுவும், இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் அதிமுக மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை:
அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரம், வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். வாக்கு சேகரிப்பு, வெற்றி வியூகம் குறித்து கலந்தாலோசித்தாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுவுக்கே வெற்றி:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் எத்தனை அமைச்சர்கள் முகாமிட்டாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என கூறியுள்ளார். இருப்பினும், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.