121இல் 80 ஓகே.! ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் விவரம் இதோ…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்புமனுக்களில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 10ஆம் தேதி வாபஸ் பெற கடைசி தேதியாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 121 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு பரிசீலனை : இன்று இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. திமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வேட்புமனு ஏற்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனுவும் ஏற்கப்பட்டது .
ஓபிஎஸ் – டிடிவி.தினகரன் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் மனு ஏற்கப்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவருமே இடைத்தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
80 வேட்புமனுக்கள் ஏற்பு : மொத்தமாக 121 வேட்புமனுக்களில் 80 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் வரும் 10ஆம் தேதி தான் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி என்பதால் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.