அதானிக்கும், பிரதமருக்கும் என்ன தொடர்பு? – ராகுல்காந்தி சரமாரி கேள்வி..
அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில ஆண்டுகளிலேயே மளமளவென உயர்ந்தது எப்படி? என மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ஒட்டுமொத்த நாடும் அதானி விவகாரம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குடும்ப சொத்து மதிப்பு 2022 இல் 140 பில்லியன் டாலராக உயர்ந்தது எப்படி? என கேள்வி எழுப்பினார். அதானி குழுமத்தின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை குறித்தும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து வகை தொழில்களிலும் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றசாட்டினார்.
அதானி இத்தனை தொழில்களை உருவாக்க யார் உதவினார்கள்?, அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில ஆண்டுகளிலேயே மளமளவென உயர்ந்தது எப்படி? அனைத்து தொழில்களிலும் அதானி மட்டுமே வெற்றி பெறுகிறார் என்றால் அதற்கு என்ன காரணம் எனவும் காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
அதானி குழுமத்தை கட்டாயப்படுத்தி விமான நிலையங்களை கொடுக்கிறது மோடி அரசு. அதானிக்காகவே விதிமுறைகளில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொண்டால் அங்கு அதானி நிறுவனம் தொழில் தொடங்க அனுமதி கிடைக்கிறது என குற்றசாட்டினார்.
மேலும் மத்திய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதானி விவகாரம் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமலியில் ஈடுபட்டனர்.