சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி.!
சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கவுரி உட்பட பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, என ஐந்து வழக்கறிஞர்களும் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று கூடுதலாக 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் மூத்த நீதிபதியாக விக்டோரியா கவுரி இன்று பதவியேற்றுள்ளார். இவர் அரசியல் பின்புலம் கொண்டவர் என கோரி இவரது பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
நீதிபதி விக்டோரியா கவுரி, பாஜக நிர்வாகியாக இருந்தவர், அவர், வழக்கறிஞராக இருந்த சமயம் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர், நீதிபதியாக பதவி ஏற்க வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தகுதியற்றவர் என பல்வேறு வாதங்களை மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வாதிட்டார்.
அந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே, சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கவுரி உட்பட பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, என ஐந்து வழக்கறிஞர்களும் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக. பதவியேற்று கொண்டனர்.
ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றுள்ளனர் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தனர். விக்டோரியா கவுரியை அரசியல் காரணத்துக்காக எதிர்க்கவில்லை, வெறுப்பு பேச்சுக்காக மட்டுமே எதிர்க்கிறோம் என மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதனை அடுத்து, விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
மறுபக்கம், உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பதவியேற்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .