#BREAKING: சிறுவனின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

Default Image

செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் செல்வன் கோகுல்ஸ்ரீ 31-12-2022 அன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தாயார் பிரியா, கணவர் பழனி (லேட்) அவர்களுக்கு இழப்பீடாக ரூ.7.5 இலட்சமும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியாக ரூ.2.5 இலட்சம் என மொத்தம் 10 இலட்சம் ரூபாய் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் ஆறுபேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயார் பிரியா அவர்களுக்கு தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, தாம்பரம் வட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பினை ஒதுக்கீடு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அவர்கள் தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் மர்மமான முறையில் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இது தொடர்பாக சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்பின் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன் கடந்த 31-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்