ஒப்புதல் படிவத்தை நாளை இரவு 7 மணிக்குள் தர வேண்டும் – அவைத்தலைவர்
அதிமுக வேட்பாளருக்கான ஒப்புதல் கடிதத்தை நாளை இரவு 7 மணிக்குள் தர வேண்டும் என்று அவைத்தலைவர் அறிவிப்பு.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து, அதனை நாளை இரவு 7 மணிக்குள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் என்னிடம் சேர்த்துவிடுமாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் வேட்பாளரை முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்நது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டிருந்தார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பின்பு இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கான ஒப்புதல் கடிதத்தை நாளை இரவு 7 மணிக்குள் பூர்த்தி செய்து தர வேண்டும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.