ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!
தமது ஆதரவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கியுள்ளது. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால், வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இரு தரப்புக்கும் இன்று விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது இனி அதிமுகவின் பொது குழு முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.