ஆசியக்கோப்பையை நடத்தும் உரிமை; பஹ்ரைன் செல்லும் ஜெய் ஷா.!
ஆசியக்கோப்பையை எங்கு நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள பஹ்ரைனுக்கு ஜெய் ஷா சென்றுள்ளார்.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பொதுவான மைதானங்களில் நடத்த வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அதற்கான விவாகரத்தில் கலந்தாலோசிக்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பஹ்ரைனுக்கு சென்றுள்ளார்.
ஆசிய கோப்பையை நடத்தும் (ஹோஸ்டிங்) உரிமையை தீர்மானிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதியின் அழைப்பை ஏற்று பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்(ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா, இந்த ஏசிசி அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானிக்க இருக்கிறார். அரசாங்கத்திடம் இருந்து இன்னும் எந்த அனுமதியும் கிடைக்காததால், நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டோம் என்று பிசிசிஐ வட்டாரம் தற்போதுவரை கூறிவருகிறது.
பாகிஸ்தானின் பெஷாவரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்த பாதுகாப்பு கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஷா, இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார், இதற்கு பதிலாக இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும், பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று முன்னாள் பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா அப்போது கூறியிருந்தார்.