கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை ஒருவர் திட்டிய விவகாரம்.! தமிழக அரசுக்கு பட்டியலினத்தவர் நல ஆணையம் நோட்டீஸ்.!
சேலத்தில் பட்டியலின இளைஞரை திட்டிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என தேசிய பட்டியலினத்தவர்கள் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் திருமலைகிரி ஊராட்சியில், உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின இளைஞர் ஒருவர் உள்ளே சென்று வழிபட்டுள்ளார். இதனை பார்த்த மாற்று சமூகத்தினை சேர்ந்த மக்கள் அந்த இளைஞரை திட்டி வெளியே அனுப்பியுள்ளனர். மேலும், மறுநாள் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அந்த இளைஞரை அனைவரது முன்னிலையிலும் திட்டியுள்ளார்.
அப்போது அந்த ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டும் தொனியிலும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தேசிய பட்டியலின நல அமைப்பானது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், பட்டியலின இளைஞரை ஊர்மக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் திட்டியது தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என இன்னும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் பட்டியலின மக்கள் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது.