தொடங்கியதுமே தொடர் அமளி… ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை.!
தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை இன்று மதியம் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் துவங்கியது. அதன் பிறகு நேற்று மத்திய பட்ஜெட் 2023-2024-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் மற்றும் நேற்று பட்ஜெட் தாக்கல் தொடர்பாக கேள்வி நேரம் கிடையாது. இன்று பட்ஜெட் மற்றும் மற்ற விவகாரங்கள் குறித்த கேள்வி நேரம் இருக்கும் என்பதால் நாடாளுமன்ற மக்களவை காலையில் துவங்கியது.
இன்று காலை நாடாளுமன்றத்தில் மக்களவை கூடியதும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், வெளிநாட்டு குழு ஒன்று நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை கண்காணிக்க வந்துள்ளதாக குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அதானி குழும பங்குகளை எல்ஐசி வாங்கியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இந்த அமளியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவையை இன்று மதியம் இரண்டு மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.