இரட்டை இல்லை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது – டிடிவி தினகரன்
ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்னும் இயக்கத்தைப் பலவீனமடைய வைத்துவிட்டார்கள் என டிடிவி தினகரன் வேதனை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் தவறில்லை. தமிழக அரசு நிதி நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், தி.மு.க சார்பாக அவர்களின் கட்சி அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச் சின்னத்தை அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க என்ற அரக்கனை வெளியேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தற்போது இருக்கும் சூழலில், இரட்டை இலை சின்னம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பது ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் வாய்ப்பு உள்ளது.
தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கையொப்பமிட வேண்டும். இல்லாவிட்டால் சின்னம் முடக்கப்படும். ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்னும் இயக்கத்தைப் பலவீனமடைய வைத்துவிட்டார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.