சென்னை அயனாவரத்தில் 21 வீடுகள் இடிப்பு!வீட்டின் உரிமையாளர்கள் வருத்தம்!
ஓட்டேரி கொன்னுர் நெடுஞ்சாலை சென்னை அயனாவரத்தில் சிக்னல் அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 50 வருடங்களாக 21 பேர் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வந்தனர். அதில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
திரு.வி.க.நகர் மண்டல (மண்டலம் 6) மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தின் அளவை குறிப்பிட்டு கொடுக்கும்படி அதிகாரி அருணா மற்றும் செயற்பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் அயனாவரம் தாசில்தார் மஞ்சுநாதனை கேட்டுக்கொண்டனர்.
அதன்படி தாசில்தார் தலைமையிலான குழு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 21 வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் இருப்பதை கண்டறியந்தனர்.
இதன்படி வீடுகளை காலி செய்யும்படி மேற்கண்ட 21 வீட்டின் உரிமையாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் வீடுகளை காலி செய்ய முடியாது என அங்கு வசித்து வந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் செயற்பொறியாளர் செந்தில்நாதன் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் சரஸ்வதி, பொன்னுரங்கம், கோபிநாத் மற்றும் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு இருந்த வீடுகளை அதிரடியாக இடித்து அகற்றினார்கள். மொத்தம் 19 வீடுகள் அகற்றப்பட்டது. 2 வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் வழங்கினார்கள்.
மேலும் அங்கு இருந்த ஒரு டாஸ்மாக் கடை கட்டிடம் மற்றும் பழுதடைந்த நிலையில் இருந்த மாநகராட்சி கழிப்பறை ஒன்றும் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடம் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.