இந்த 4 அம்சங்களும் பட்ஜெட் 2023-24இன் முக்கிய புள்ளிகளாகும்.! நிர்மலா சீதாராமன் கருத்து.!
பட்ஜெட் 2023- 2024 பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சுற்றுலாவுக்கான சிறப்பு திட்டங்கள், கைவினை கலைஞர்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்துதல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. – நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேட்டி.
2023-24க்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் கல்லூரிகள் திறப்பது, சுங்க வரி உயர்வு, சுற்றுலா தலங்கள், பான் கார்டு இனி அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் குறித்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பட்ஜெட் ஏழைகள் நடுத்தர மக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது என தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இந்த மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பட்ஜெட் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சுற்றுலாவுக்கான சிறப்பு திட்டங்கள், கைவினை கலைஞர்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்துதல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும் என குறிப்பிட்டார்.
மேலும், புதிய வரி விதிப்பு முறைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என அரசாங்கம் யாரையும் வற்புறுத்தவில்லை. பழைய முறையில் வரி செலுத்துவோர் விரும்பினால் அப்படியே தொடரலாம். இருப்பினும், அதிகரித்த தள்ளுபடிகள் மற்றும் விலக்குகள் காரணமாக புதிய வரி முறை இப்போது அனைவரும் கவரும் வகையில் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.