அதிமுக வேட்பாளர் தென்னரசு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை.!
அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தென்னரசு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிடுவார். -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
இம்மாதம் (பிப்ரவரி) வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தெரிகிறது. அடுத்து, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் என பலரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
அதே போல, பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2001 முதல் 2006 மற்றும் 2016 முதல் 2021 வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.
இந்த வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘ எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்து விட்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு அவர்கள் தான் வேட்பாளர். அவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.’ என நம்பிக்கையோடு பேசினார்.