9.5 கோடி ஆணுறைகள் இலவசம்.! தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு.!
பாலியல் ரீதியான நோய்களை தடுக்க 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து காதல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் முயற்சியில் 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாலுறவு நோய்கள் பரவாமலும், டீன் ஏஜ் கர்ப்பத்தையும் தடுக்க முடியும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில், உலகளாவிய சுகாதார அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆணுறைகள் வழங்கப்டும் என்று அரசு அறிவித்துள்ளது. சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்தில், வாரத்திற்கு 10 ஆணுறைகளைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு அளவுகளில் கிடைக்கும் இந்த ஆணுறைகளை மருந்தகங்கள் மற்றும் நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் முதன்மை பராமரிப்பு பிரிவுகளில் பெற்று கொள்ளலாம்.
தாய்லாந்தில் சமீபத்திய ஆண்டுகளில் பாலியல் ரீதியான நோய்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. இதில் சிபிலிஸ் மற்றும் கோனோரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை எண்ணிக்கை மிக அதிகமாகும். இதனால் 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.