தலைமுறைகள் கடந்தும் நடைமுறையில் தீண்டாமை… ஆட்சியரின் நடவடிக்கையால் நெகிழ்ந்து போன பொதுமக்கள்.!
தீண்டாமை ஒழிப்பு தினத்தில் 80 ஆண்டுகால பிற்போக்கு தன்மையை தகர்தெறித்துள்ளார் திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் ஐ.ஏ.எஸ் மற்றும் எஸ்.பி கார்த்திகேயன்.
வருடங்கள் உருண்டோடி நவீன யுகத்திற்கு நாம் வந்தாலும், கையிலே மொத்த உலகமும் இருக்கிறது என்றாலும் இன்னும் பல்வேறு இடங்களில் சாதிய பாகுபாடு, தீண்டாமை இருப்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை செய்த குற்றவாளிகள் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தீண்டாமை ஒழிப்பு தினம் :அதேபோல் நேற்று முன்தினம் ஜனவரி 30 ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினம் அன்று ஓர் பாராட்டுக்குரிய செயலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்து காட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூர் எனும் ஊரில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அது மிகவும் பழமை வாய்ந்த கோவில். அங்கு கடந்த 80 வருடங்களாக ஓர் தீண்டாமை வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, அங்கு வசிக்கும் 2500 க்கும் ஏற்பட்ட பொதுமக்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பட்டியலின மக்களை மட்டும் அந்த கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்களாம்.
ஊர் கட்டுப்பாடு : மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவின் போது, கோவில் உள்ளே சென்று வழிபடுவது, பொங்கல் வைப்பது, என்று இருப்பார்களாம். ஆனால் பட்டியலின மக்கள் மட்டும் உள்ளே வரக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்துள்ளது. இது குறித்து அந்த மக்கள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி : இதனை கவனித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அனைத்து சமூகத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை அப்போது தோல்வியில் முடிந்துள்ளது.
ஆட்சியரின் நடவடிக்கை : இதனை அடுத்து நேற்று முன் தினம் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பட்டியல் இன மக்களை கூட்டாக அழைத்து முத்து மாரியம்மன் கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு பரபரப்பான சூழல் நிலவும் என்பதை அறிந்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்களை உடன் அழைத்து சென்றுள்ளார்.
காவலர்கள் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் கொடுத்த நம்பிக்கையோடு 80 ஆண்டுகால தீண்டாமையை தகர்த்தெறிந்து கோவிலுக்குள் உள்ளே சென்றுள்ளனர். பிறகு சாமி கும்பிட்டு அங்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர்.
இப்படி மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல் அனைவரது மனதிலும் இதே போல் எண்ணம் இருக்க வேண்டும். அனைவரும் ஒன்று என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.