பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்! பிபிசிக்கு ரஷ்யா குற்றச்சாட்டு.!
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தயாரித்த பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி மீது ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 2002இல் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து, பிபிசி தயாரித்த ஆவணப்படம் குறித்து, கருத்து தெரிவித்த ரஷ்யா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவிற்கு எதிராக மட்டுமல்லாமல், சுதந்திரமான கொள்கையைப் பின்பற்றும் மற்ற உலக நாடுகளின் அதிகார மையங்களுக்கு எதிராகவும், பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் இவ்வாறு பரபரப்பை உண்டாக்கி வருவதாக, ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, பிபிசியின் இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமின்றி, சுதந்திரமான கொள்கையைப் பின்பற்றும் மற்ற உலக நாடுகளுக்கு எதிராகவும் வெவ்வேறு வழிகளில் பிபிசி இவ்வாறு பரபரப்பை உண்டாக்குகிறது என்பதற்கு இது மற்றொரு சான்று என்று கூறினார்.
பிபிசி இதன்மூலம் சில குழுக்களுக்கு எதிராக செயல்பட்டு ஒரு கருவியாக செயல்படுவது தெரியவருவதாக அவர் தெரிவித்தார். பிபிசி ஒன்றும் தனியார் தொலைக்காட்சி அல்லது வானொலி நிறுவனமோ அல்ல, மாறாக ஒரு சார்புடைய நிறுவனம். பத்திரிகையின் அடிப்படை கடமைகளை, பிபிசி அடிக்கடி புறக்கணிப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிபிசி ஆவணப்படம் தொடர்பாக பிரதமர் மோடியை ஆதரித்துள்ளார். மேலும் மோடி குறித்த இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படமான “இந்தியா: மோடி கேள்வி”க்கான இணைப்புகளை(Link) பகிர்வதை தடுக்கும் நோக்கில் இதனை தடை செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டு, அதன் விசாரணை பிப்-6ஆம் தேதி விசாரைணக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.