மூடும் அபாயத்தில் பொதுத்துறை வங்கிகள் எஸ்.எஸ்.முந்த்ரா எச்சரிக்கை…!
மிக மோசமான வருவாய் இழப்பிலும், வராக் கடன் சிக்கலிலும் மாட்டித் தவிக்கும் இந்திய வங்கிகள் நீண்ட நாள்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா எச்சரித்துள்ளார்.
வராக் கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதியளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருவதாகவும் முந்த்ரா கூறியுள்ளார்.மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், ‘2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30-ஆம் தேதி ரூ. 6 லட்சத்து 89 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது; குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், ‘இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில், 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பானது, அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது’ என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே முந்த்ராவும், வங்கிகளின் மோசமான நிலைiக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளன; அதில் 9 வங்கிகள் வாராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை என்பதை முந்த்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.