பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – 28 பேர் பலி.. 90 க்கும் மேற்பட்டோர் காயம்!
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 28 பேர் உயிரிழப்பு.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் வழிபாட்டு நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், குறைந்தது 50 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்புடன் போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மசூதியின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறப்பு எண்ணிக்கை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இறப்பு அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.