சென்னையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்த சிறுவன் உயிரிழப்பு!
உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புள்சை வைத்து பயிற்சி செய்த போது தலையில் விழுந்ததால் காயமடைந்த 15வயதுச் சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் மோகன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்து 11ஆம் வகுப்புக்குச் செல்ல இருந்தான். கோடை விடுமுறையையொட்டி வில்லிவாக்கம் நாதமுனியில் உள்ள வி லிப்ட் என்கிற தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயிற்சி செய்து வந்தான்.
நேற்று மாலையில் மோகன் இரு கைகளிலும் தம்புள்சைத் தூக்கிப் பயிற்சி செய்தபோது சாய்ந்து விழுந்ததில் தலையில் அடிபட்டுக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தலையில் காயமடைந்த மோகனை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சிகிச்சை பயனின்றி மோகன் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து வில்லிவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர், பயிற்றுநர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.