கண்ணாம்மூச்சி விளையாட்டில் காணாமல் போன சிறுவன்..! வியப்பூட்டும் சம்பவம்..நிகழ்ந்தது எங்கே.?
பங்களாதேஷில் கண்ணாம்மூச்சி விளையாடி கொண்டிருந்த சிறுவன் 6 நாட்களுக்கு பின் வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
பங்களாதேஷ் நாட்டில் 15 வயது ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளான். காணாமல் போன அந்த சிறுவன் 6 நாட்கள் கழித்து மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் வியப்பை அளிக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் ஃபாஹிம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளான். ஃபாஹிம், ஜனவரி 11 அன்று துறைமுக நகரமான சிட்டகாங்கில் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒளிந்து கொள்வதற்காக கண்டெய்னர் பெட்டிக்குள் சென்று பூட்டிக் கொண்டான்.
விளையாடிய களைப்பில் மிகவும் சோர்வான ஃபாஹிம் கண்டெய்னருக்கு உள்ளேயே தூங்கியுள்ளான். சிறிது நேரத்தில் கண்டெய்னர் பெட்டி மலேசியாவிற்கு செல்லும் வணிகக் கப்பலில் ஏற்றப்பட்டது. சுமார் 2,300 மைல்கள் கடந்து ஜனவரி 17 அன்று கப்பல் மலேசிய துறைமுகத்தை சென்றடைந்தது. மலேசியாவில் உள்ள அதிகாரிகள் கண்டெய்னரில் இருந்து தட்டும் சத்தத்தைக் கேட்டு மீட்புப் பணியை தொடங்கினர்.
அதிகாரிகள் பெட்டியின் கதவை திறந்ததும் தான் எங்கே இருக்கிறேன் என்ற குழப்பத்தில் மீண்டும் கன்டேனருக்குள் செல்லும் ஃபாஹிமின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஒரு வார காலமாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த ஃபாஹிம் மலேசியாவில் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் மலேசியாவின் டெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிறுவனின் உடல்நலம் சீராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.