பள்ளி மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்பு..! இரவு உணவில் சந்தேகம்..!
தெலுங்கானாவில் உள்ள பள்ளியில் 20 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் : தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள பலேருவில், ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜேஎன்வி) பள்ளியின் மாணவர்கள் 20 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பள்ளி முதல்வர் சந்திரபாபு கூறுகையில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தின்பண்டங்களை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் தான் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால் மாணவர்கள் பள்ளி முதல்வரின் கருத்தை ஏற்கவில்லை. ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இரவு உணவிற்கு பள்ளியில் கோழி கறி பரிமாறப்பட்டதால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் டாக்டர் பி.மாலதி பள்ளிக்குச் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.