2 நாளில் 2.37 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.! பங்கு சந்தை சரிவால் அதானிக்கு கடும் வீழ்ச்சி.!
அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் காரணமாக இந்திய பங்கு சந்தையில் கடந்த 2 நாளில் சுமார் 2 லட்சம் கோடிகளை அதானி குழுமம் இழந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்திய தொழிலதிபரும், உலக பணக்காரர் ஆன அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது எனவும், கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி பங்குகள் பங்கு சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதானி நிறுவனம் தொடர் பங்கு வெளியீட்டு மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட தீர்மானித்து உள்ளது. ஜனவரி 27 (இன்று) முதல் ஜனவரி 31 வரையில் இந்த தொடர் பங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையினால் மட்டும் கடந்த 2 நாட்களில் அதானி பங்குகளின் விலை 2 லட்சத்து 37ஆயிரம் கோடி ரூபாய் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், உலக பணக்காரர் வரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த அதானி தற்போது 7வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இது குறித்து அதானி தரப்பில் கூறுகையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் போலியாக தங்கள் மீது குற்றம் சுமத்தி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்து வருகிறது. மேலும், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதானி குழும தரப்பு கூறியுள்ள்ளது.