ரொம்ப நல்ல மனிதர்… ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி.!
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் சென்னையில் உள்ள ஸ்டண்ட் இயக்குனர்கள் சங்க அலுவலகத்தில் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எனவே பல பிரபலங்கள் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்துவிட்டு ஜூடோ கே.கே.ரத்னம் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.
ஜூடோ கே.கே.ரத்னம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது ” ஜூடோ ரத்னத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்னம்.
அவர் ரொம்ப நல்ல மனிதர் ஹீரோக்களின் பாதுகாப்பு மட்டுமில்லாமல், அவருடன் வேலை பார்க்கும் ஸ்டண்ட் நடிகர்களின் பாதுகாப்பிலும் அவர் மிகுந்த கவனம் செலுத்துவார். அவருடைய மறைவு வருத்தமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் ஜூடோ கே.கே.ரத்னம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.