பேசுபொருளாகுமா தேனீர் விருந்து.? ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள்.!
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் மாளிகை தேனீர் விருந்தை புறக்கணித்தாலும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் ஓர் அரசியல் ரீதியிலான உரசல் என்பது நீண்டு கொண்டே இருந்து வருகிறது. அண்மையில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வின் போது இந்த விஷயம் பூதாகரமாக எழுந்தது. ஆரம்பத்தில் இருந்து தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள், ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா உள்ளிட்ட சில குறிப்பிட்ட மசோதாக்களுக்கு கூட ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருந்தது ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் : இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குரல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. மேலும், ஒரு விழாவில் ஆளுநர் பேசுகையில், தமிழ்நாடு எனும் வார்த்தையை தமிழகம் எனும் குறிப்பிடலாம் என ஆளுநர் ரவி கூறியதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தேனீர் விருந்து புறக்கணிப்பு : இப்படி ஆளுநருக்கு எதிரான நிலைப்பாடு திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே இருப்பதால், நேற்று ஆளுநர் மாளிகையின் நடைபெற்ற தேநீர் விருந்துக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் கூட திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
முதல்வர் பங்கேற்பு : இருந்தும் திமுக, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் நேற்று கலந்து கொண்டனர்.
இந்த தேநீர் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட கட்சி நிர்வாகிகள், அதிமுக கட்சியினர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மொத்தமாக தொழிலதிபர்கள் உட்பட 500 பேர் இந்த தேனீர் விருந்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திமுக கூட்டணி கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணித்தாலும், ஆளும் அரசு என்கிற முறையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.