கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிராஜ்! நம்பர்-1 பவுலரானது எப்படி.!
இந்தியாவின் முகமது சிராஜ், உலகின் நம்பர்-1 பவுலர் ஆனது குறித்து பார்க்கலாம்…
ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட ஒருநாள் பவுலர்களின் தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயதான சிராஜ், 21 ஒருநாள் போட்டிகளில்(38 விக்கெட்கள்), மட்டுமே விளையாடி இந்த நம்பர்-1 பவுலர் சாதனையை படைத்துள்ளார். சிராஜ், 2019இல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த ஒருநாள் தொடரில் முதன்முறையாக அறிமுகமானார்.
ரஞ்சி டிராபி தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் சிராஜ், 2016-17 சீசனுக்கு முன்பு வரை தன் பெயரை நிலைநிறுத்தும் வகையில் எந்தவித ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அதன்பிறகு 9 போட்டிகளில் 41 விக்கெட்கள் வீழ்த்தியதுடன் ஹைதராபாத் அணியை காலிறுதிக்கு தகுதிபெற வைத்தார், அந்த சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் 3-வது இடம்பிடித்தார்.
அவரது அந்த ஆட்டம் ஐபிஎல்-10 ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுத்தந்தது. சிராஜின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றின் மூலம் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வந்தார். மேலும் அந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி, நாக்-அவுட் போட்டிகளில் சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
அதன்பிறகு 2017-18 ரஞ்சி தொடரில் சிராஜ் விளையாடவில்லை, ஆனால் விஜய் ஹசாரே கோப்பைக்காக விளையாடிய அவர், 7 ஆட்டங்களில் 23 விக்கெட்கள் வீழ்த்தினார். இதில் மூன்று முறை சிராஜ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சையது முஷ்டாக் அலி போட்டியில் 5 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2017 ஐபிஎல் ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து 2.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது, அதிக போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இருந்தும் 6 போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தினார். அந்த சீசனுக்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் வாங்கியது.
தற்போது வரை ஆர்சிபி அணியில் விளையாடிவரும் சிராஜ், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்திய அணியிலும் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கினார். சிராஜின் மோசமான ஆட்டத்தை அடுத்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார், இதனையடுத்து 3 ஆண்டுக்கு பிறகு 2022 இல் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார்.
அவரது வருகையால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு எதிரணிக்கு மிரட்டலாக இருந்து வருகிறது, வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு விக்கெட்களையும் வீழ்த்தி வருகிறார். இந்திய அணியில் பும்ரா இல்லாத இடைவெளியை சிராஜ் கச்சிதமாக பயன்படுத்தி, ஐசிசி ரேங்கிங்கில் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார்.
சிராஜ் 2022 இல் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை(சராசரி-23.46) எடுத்துள்ளார். பும்ரா இந்தியாவிற்காக அறிமுகமானதில் இருந்தே இந்திய அணிக்கு ஒரு சொத்தாக இருந்து வருகிறார். 72 ஒருநாள் போட்டிகளில், 121 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிராஜின் இந்த உத்வேகம், 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சில் மேலும் வலிமை சேர்க்கிறது.
???? There’s a new World No.1 in town ????
India’s pace sensation has climbed the summit of the @MRFWorldwide ICC Men’s ODI Bowler Rankings ????
More ????
— ICC (@ICC) January 25, 2023