ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து.! முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.!
ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேனீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இன்று 74 வது குடியரசு தின விழாவானது தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முன்பு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
தேனீர் விருந்து : வழக்கமாக ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அதில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அதன்படி இம்முறையும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புறக்கணிப்பு : இந்த விருந்தினை முன்னதாகவே புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்டன. திமுகவும் புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் : இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக, அதிமுக, தாமாகவினரும் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை தேனீர் விருந்தில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சுமார் 500 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.