குடியரசு தினம் – சுதந்திர தினம் முக்கிய வேறுபாடுகள்.! கொடி ஏற்றுவதும்.. கொடி அவிழ்ப்பதும்…
குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கு உள்ள சிறு வித்தியாசத்தையும், எதற்காக எவ்வாறு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது என்பது பற்றியும் இந்த சிறு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நமது நாடு பலவேறு தேசத்தலைவர்களின் போராட்டத்தினால், பலரது உயிர்தியாகங்களால் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்படி இருந்தும், ஜனவரி 26ஆம் தேதி ஏன் குடியரசு தினம் அதுவும் 1950ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதற்கான ஒரு சிறு விளக்கத்தையும், வேறுபாட்டையும் இப்போது பார்க்கலாம்.
குடியரசு நாடு இந்தியா : 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் இந்தியா முழுக்க ஆங்கிலேயர்களின் சட்ட திட்டங்கள் தான் நடைமுறையில் இருந்தது. இதனை தவிர்த்து டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு சட்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் இந்திய தண்டனை சட்டம் வகுக்கப்பட்டது. அந்த சட்ட நடைமுறையானது நவம்பர் 29ஆம் தேதி 1949இல் இந்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் இந்தியா சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக உலக அரங்கில் செயல்பட்டு வருகிறது.
கொடி ஏற்றுவது – அவிழ்ப்பது : சுதந்திர தினத்தன்று டெல்லி, செங்கோட்டையில் இந்திய பிரதமர் கொடியேற்றுவார். அதே போல் குடியரசு தினத்தன்று ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் கொடிஅவிழ்ப்பார். குடியரசு தின அணிவகுப்பு ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட் வரையில் செல்லும். கொடி ஏற்றம் – கொடி அவிழ்ப்பு என்பது சுதந்திரம் அடைந்த போது ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டு நமது இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் நினைவாக தான் சுதந்திர தினத்தன்று கொடி கம்பத்தில் இந்திய தேசியகொடி ஏற்றப்படுகிறது.
குடியரசு தலைவர்- மாநில ஆளுநர் : அதுவே, குடியரசு தினத்தன்று ஏற்கனவே நமது நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட காரணத்தால், கொடி கம்பத்திலேயே கட்டப்பட்டு மூடப்பட்டு இருக்கும். அதனை இந்திய குடியரசு தலைவர் அவிழ்த்துவிட்டு பறக்க விடுவார். அதே போல மாநிலங்களிலும் சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநில முதலமைச்சர் கொடியேற்றுவார். குடியரசு தினத்தன்று அம்மாநில ஆளுநர், ஆளுநர் மாளிகையில் கொடி அவிழ்ப்பார்.