கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம்.! – ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி.!
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதற்கு நன்றி தெரிவித்தோம். தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கு கேட்டுகொண்டோம். அவரும் வருவதாக சம்மதித்துள்ளார். என தெரிவித்தார்.
மேலும், கடந்த 3,4 நாட்களாக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு சேகரித்து வருவதற்கு நன்றி தெரிவித்தோம். நாங்கள் கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ, திருமாவளவன் , முஸ்லீம் லீக் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
அதே போல, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து பேச உள்ளோம். அதற்காக கமல்ஹாசன் தரப்பிடம் நேரம் கேட்டுள்ளோம். வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. திமுக கூட்டணி வலுவான கூட்டணி. முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் மேலிடமான ராகுல், சோனியா காந்தி, கார்கே ஆகிய முக்கிய தலைவர்களின் ஆலோசனை படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும். அதே போல, இந்த தொகுதியை திமுக காங்கிரஸுக்கு ஒதுக்கியதே பெரிய விஷயம். திமுக கூட்டணியுடன் கலந்து பேசி இருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.