INDvsNZ ODI: ரோஹித், கில் அதிரடி! இந்தியா அபார வெற்றி.!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே தடுமாறி வந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். இதனால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி, 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் (36 ரன்கள்), மிட்சேல் சாண்ட்னர்(27 ரன்கள்) எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் மொஹம்மது ஷமி 3 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஹர்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
109 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா(51 ரன்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு விராட் கோலி(11 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (40* ரன்கள்) எடுக்க 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 2-0 என வென்றது.