ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும்.! நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.!
தமாகா ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளளது. திமுக மற்றும் அதிமுக க கட்சிகள் கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளை களமிறக்கியதால் இந்த முறையும் அதே முறை தொடருமா அல்லது நேரடியாக தேர்தல் களத்தில் மோத உள்ளனரா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இன்று காலை தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பேசிய ஜி.கே.வாசன், ஓரிரு நாட்களில் இடைத்தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர் களமிறங்குவார் என்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் யுவராஜ் களமிறங்கி தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.