INDvsNZ ODI: ஷுப்மன் கில் இரட்டை சதம்! நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 349 ரன்கள் குவிப்பு.!
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் இரட்டை சதத்துடன் இந்திய அணி, 349/8ரன்கள் குவிப்பு.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய, இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தபோது ரோஹித் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 8 ரன்களுக்கும், இஷான் கிஷன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இறங்கிய சூர்யகுமார் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு புறம் கில், பொறுப்புடன் விளையாடி தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார், அவருடன் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்ந்து 74 ரன்கள் குவித்த நிலையில், ஹர்டிக் 28 ரன்களுக்கு போல்டானார். விக்கெட்கள் ஒருபுறம் விழுந்தது கொண்டிருக்க, கில் பொறுமையாக விளையாடி 145 பந்துகளில்(19 போர்கள், 8 சிக்ஸர்) தனது முதல் இரட்டை சதம் அடித்துள்ளார்.
இறுதியில் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில், 208 ரன்கள்(19 போர்கள், 9 சிக்ஸர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்சேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.