மாநகராட்சி தேர்தல்.. வெளிநாட்டு படிப்பு.! ஆளுநர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி குற்றசாட்டு.!
ஆசிரியர்களை பயிற்சிக்கு பின்லாந்துக்கு அனுப்பும் அரசின் திட்டத்தை, லெப்டினன்ட் கவர்னர் ரத்து செய்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பயிற்சிக்கு பின்லாந்திற்கு அனுப்பும், அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும், லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து கூறியதாவது, இடைவிடாது அத்துமீறலில் ஈடுபடும் இந்த லெப்டினன்ட் கவர்னர் யார்? அவர் நம் தலையில் அமர்ந்துகொண்டு நம் குழந்தைகள் எப்படி படிக்கவேண்டும் என்று முடிவு செய்ய இவர் யார்? என கூறியுள்ளார்.
எங்களைத் தடுக்க லெப்டினன்ட் கவர்னருக்கு(எல்.ஜி) அதிகாரம் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாளை நாம், எல்.ஜி.யுடன் இணைந்து மத்தியில் ஆட்சிக்கு வரலாம், ஆனால் எங்கள் அரசு மக்களை இது போன்று துன்புறுத்தாது என்று கெஜ்ரிவால் கூறினார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு அனுப்பி பயிற்சி அளிக்கும் டெல்லி அரசின் திட்டத்தை, சக்சேனா கடுமையாக மறுத்து, உள்நாட்டிலேயே பயிற்சியளிக்க அரசை வேண்டினார். அவருக்கு வேண்டியதெல்லாம் அரசின் செலவு பயனுள்ளதாக இருப்பது பற்றி மட்டுமே. இது பற்றி நான் அவரிடம், செலவு பற்றி கேட்க நீங்கள் யார், மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர்.
மேலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 104 இடங்களை வென்றது தன்னால் தான் என்றும், அவர் இல்லாமல் 20 இடங்களைக் கூட வென்றிருக்க முடியாது என்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒரு சந்திப்பில் தன்னிடம் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.