ஜெயிலர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு 8 லட்சம் இழந்த நடிகை.? மோசடியில் 2 பேர் கைது.!
ரஜினி படத்தில் நடிக்கவைப்பதாகக் கூறி, நடிகை சன்னா சூரியை ஏமாற்றிய இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாடல் அழகியும் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான சன்னா சூரி, என்பவரை ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தில் நடிக்கவைப்பதாகக் கூறி, ரூ.8 லட்சத்துக்கும் மேல் பணமோசடி செய்துள்ள இருவரின் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சன்னாவை, ரஜினிகாந்துடன் இணைத்து ஒரு போலி போஸ்டரையும் உருவாக்கி அவரை நம்ப வைத்துள்ளனர். இந்த போஸ்டரை சன்னா, தனது இன்ஸ்டாவிலும் இது எனது முதல் படம் என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு பல செய்தித்தளங்களும் அவருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்று பாராட்டி வந்தன.
காவல்துறையின் தகவலின்படி, இன்ஸ்டாவில் போலி கணக்கை உருவாக்கி அதன்மூலம் சன்னாவை தொடர்பு கொண்டு, தன்னிடம் ஜெயிலர் போன்ற மிகப்பெரிய படத்திற்கான நடிகர்/நடிகை தேர்வுக்கு புதுமுகம் தேவை என்று கூறினர். மேலும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பீர்கள் என்று கூறியுள்ளனர்.
இதற்காக போலீஸ் வேடமிட்ட சன்னாவின் வீடியோ ஒன்றை கேட்டுள்ளார், பின்பு அதனைப்பார்த்து விட்டு நீங்கள் தேர்வாகிவிட்டதாக சொல்லி, துபாயில் சூட்டிங் நடக்கிறது, இதனால் விமான டிக்கெட் மற்றும் இதர செலவுகளுக்காக சன்னாவிடமிருந்து ரூ.8.48 லட்சம் வாங்கியுள்ளார்.
பிறகு படப்பிடிப்பு தாமதமாகிவிட்டதாகவும், விரைவில் புதிய டிக்கெட்டுகளை அனுப்புவதாகவும் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி, ஜெயிலரின் உதவி இயக்குநர் சன்னாவைத் தொடர்பு கொண்டு, படத்தின் போலி போஸ்டரை இன்ஸ்டாவிலிருந்து அகற்றும்படி கூறியதாக சன்னா கூறினார்.
அதன்பிறகு ஒருவர் தன்னை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியபோது, அப்படி யாரும் கிடையாது என்றும் படத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது என்றும் உதவி இயக்குநர் கூறினார். இதனையடுத்து போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறை, அந்த இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.