சீன கப்பலை கண்காணிக்க போர்க்கப்பலை அனுப்பினோம்.! இந்தோனேசிய கடற்படைத் தலைவர் தகவல்.!
சீனக் கடலோரக் காவல் கப்பலைக் கண்காணிக்க தனது நாட்டின் போர்க்கப்பலை அனுப்பியது என்று இந்தோனேசிய கடற்படைத் தலைவர் கூறியுள்ளார்.
இயற்கை வளங்கள் நிறைந்த நடுனா கடல் (Natuna Sea) பகுதியில் சீன காவல் கப்பல் பயணம் செய்து வந்துள்ளது. அந்த கப்பலை கண்காணிக்க இந்தோனேசியா வடக்கு நடுனா கடலில் (Natuna Sea) ஒரு போர் கப்பலை அனுப்பியுள்ளது என்று அந்நாட்டு கடற்படை தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிசிஜி 5901 (CCG 5901) என்ற சீன கப்பல் இந்தோனேசியாவின் டுனா பிளாக் எரிவாயு வயல் மற்றும் வியட்நாமின் சிம் சாவ் எண்ணெய் மற்றும் எரிவாயு வயலுக்கு அருகில் பயணம் செய்கிறது. இதன் காரணமாக ஒரு போர்க்கப்பல், கடல் ரோந்து விமானம் மாறும் ஆளில்லா விமானம் ஆகியவை சீனக்கப்பலை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
சீன கப்பல் எந்தவொரு சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும் இந்தோனேசியாவின் பொருளாதார வளங்கள் இருக்கும் பகுதியில் பயணித்துக்கொண்டு இருப்பதால் அதை கண்காணிக்க வேண்டும் என்று இந்தோனேசிய கடற்படைத் தலைவர் மேலும் கூறினார்.