வெவ்வேறு இடத்தில் வாழ்ந்த இரட்டையர்கள்.. ஒரே மாதிரி சம்பவத்தால் உயிரிழந்த சோகம்.!
900 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த 26 வயது இரட்டையர்கள் ஒரே மாதிரியான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த 26 வயது இரட்டையர்கள் சுமர் சிங் மற்றும் சோஹன் சிங் இருவரும் சூரத் மற்றும் ஜெய்ப்பூரில் 900 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்துள்ளனர். சுமார் என்பவர் குஜராத்தின் டெக்ஸ்டைல் சிட்டியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நேரத்தில் சோஹன் ஜெய்ப்பூரில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வை எழுத படித்துக்கொண்டிருந்தார்.
கடந்த புதன் கிழமை இரவு சுமர் தொலைபேசியில் பேசிகொண்டிருந்த போது சூரத்தில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வழுக்கி விழுந்து இறந்துள்ளார். தனது சகோதரன் இறந்த செய்தியை அறிந்த சோஹன் மறுநாள் ஜெய்ப்பூரில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பிய சோஹன் அதிகாலையில் அவரது கிராமத்திற்கு அருகாமையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கண்டுபிடித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இருவரது உடல்களும் அவர்களது கிராமமான சார்னோ கா தலாவில் ஒரே தீயில் தகனம் செய்யப்பட்டது.