புனேவின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும்.. என்சிபி அமோல் மிட்காரி கோரிக்கை..!
புனே நகரின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும் என என்சிபி எம்எல்சி அமோல் மிட்காரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜாபாய் போசலேயின் நினைவையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் புனே நகரின் பெயரை ‘ஜிஜாவ் நகர்’ என மாற்ற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அமோல் மிட்காரி கோரிக்கை விடுத்துள்ளார்.
புனே நகருக்கு ஜிஜாவ் நகர் என்று பெயரிடுவது மகாராஷ்டிராவின் அனைத்து சிவபக்தர்களின் விருப்பமாகும். வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை எழுப்புவேன் என மாநில சட்டசபை உறுப்பினர் அமோல் மிட்காரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மிட்காரியின் இந்த கோரிக்கையை இந்து மகாசபை ஏற்கவில்லை.
இந்து மகாசபை தலைவர் ஆனந்த் தேவ் கூறுகையில் புனே நகரின் பெயரை மாற்றுவதற்கு பதிலாக லால் மஹாலில் ஜிஜாபாய்க்கு ஒரு பெரிய நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும் என்று கூறினார். இந்த கோரிக்கையை நீண்ட காலமாக இந்து மகாசங்கம் முன்வைத்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்று ஆனந்த் மேலும் கூறினார்.