நாட்டிற்கே வழிகாட்டும் கேரளாவில் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி …!
பார்வையற்ற நிலையிலும் ஐஏஎஸ் படித்து சாதனை படைத்த பிரஞ்ஜால் பாட்டீல், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.பார்வையற்ற ஒருவர், அதிலும் பெண் அதிகாரி, மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்பது, நாட்டிலேயே இதுதான் முதல்முறையாகும். பிரஞ்ஜால் பாட்டீலை இந்த பதவிக்கு நியமித்ததன் மூலம், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதிய வழிகாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பாட்டீல். பொறியாளர் ஆவார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகள்தான் பிரஞ்ஜால் பாட்டீல். இவர் 2 வயதாக இருந்தபோது, காய்ச்சல் ஏற்பட்டு 2 கண்களிலும் பார்வை பறிபோனது.எனினும், பெற்றோரின் ஊக்கத்தால், நன்கு படித்த பிரஞ்ஜாலின் பாட்டீல், தொடுதிரை உதவியுடன், மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டமும் பெற்றார். அதைத்தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வையும் பிரஞ்சால் பாட்டீல் எழுதினார். ஆனால், அதில் அவருக்கு 773-வது இடமே கிடைத்தது. இதனால் அவரால் ஆட்சியராக முடியவில்லை. அதே நேரத்தில் ரயில்வே துறையில் தேர்வாகி கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். எனினும் மாவட்ட ஆட்சியர் லட்சியத்தை அவர் கைவிடவில்லை.
2017-ஆம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய அவர், இந்த முறை 124-ஆவது இடத்தைப் பிடித்தார். ஆட்சியர் ஆவதற்கு 124-ஆவது ரேங்க் போதுமானதாக அமைந்தது.
இந்நிலையில்தான், பிரஞ்ஜால் பாட்டீலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்துள்ளது. பிரஞ்ஜால் பாட்டீலும், பயிற்சி ஆட்சியராக திங்கட்கிழமையன்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக, தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய்தான், தன்னை ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி, மகள் பிரஞ்ஜால் பாட்டீலை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்துள்ளார்.