பெருவில் அரசுக்கு எதிரான போராட்டம்! 17 பேர் உயிரிழந்தனர்.!
பெருவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு பெருவில் நடந்த மிக மோசமான போராட்டங்களில் ஒன்றான, போலீஸாருடனான இந்த வன்முறை மோதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டும் என்றும், சிறையில் உள்ள முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்கக் கோரியும் பெருவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அதிபர் காஸ்டிலோ, தனக்கு எதிரான பதவி நீக்க வாக்கெடுப்பைத் தடுக்க சட்டமன்றத்தைக் கலைக்க முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர், காங்கிரஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் தற்போதைய ஜனாதிபதி டினா போலார்டே பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தெற்கு பெருவின் புனோ பிராந்தியத்தில் உள்ள டிடிகாக்கா ஏரியின், கரையில் உள்ள ஜூலியாக்கா நகரில் இந்த மோதல்கள் நடந்ததாக சுகாதார அமைச்சக அதிகாரி ஹென்றி ரெபாசா தெரிவித்தார். மேலும் இந்த மோதலில் குறைந்தது 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.