மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி
நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரை குறித்தும், ஆளுநரின் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில்,ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருந்துள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும்.
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.
இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?’ என பதிவிட்டுள்ளார்.