தொழில் தொடங்க உகந்த இடம் தமிழ்நாடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
தொழில் துறையில் 13 வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
இன்று சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், புத்தொழில் முதலீட்டாளர்கள் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் துறையில் 13 வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. தொழில் தொடங்க உகந்த இடமாக தமிழகம் தற்போது உருவாகியுள்ளது. என குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடுகள் வந்துள்ளன. கடந்த 2021ஐ ஒப்பிடுகையில் இது 70 விழுக்காடு அதிகம். டெல்லி , மும்பை, பெங்களூரு போன்ற தொழில்வளம் மிக்க நகரங்களில் கூட இந்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை மந்தமாக தான் இருந்தது. ஆனால் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் அதிகம் வந்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்துவிதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களும் பயன்பெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே தமிழக அரசு செயல்படுகிறது. பட்டியலின புத்தொழில் முதலீட்டாளர்களுக்காக 30 கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் தீர்வு தரும் வகையில் 1000 கோடி ரூபாய் பசுமை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் பல்வறு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.