நரீந்தர் சிங் தலிவால் கைது – பிசிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிரடி முடிவு..!
பிசிஎஸ் அதிகாரிகள் சங்கம் நரீந்தர் சிங் தலிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 9 முதல் 5 நாள் சாதாரண விடுப்பில் செல்ல முடிவு.
பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (பிசிஎஸ்) அதிகாரிகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாப் முழுவதிலும் இருந்து சுமார் 80 அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், லூதியானா போக்குவரத்து ஆணைய அதிகாரி நரீந்தர் சிங் தலிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 9 முதல் 5 நாள் சாதாரண விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி மற்றொரு கூட்டத்தைக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு பக்க நீண்ட தீர்மானத்தில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் கீழ் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தலிவாலை சட்டவிரோதமாக கைது செய்ததை விசாரிக்க ஒரு குழுவை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்போர்ட்டர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் பிசிஎஸ் அதிகாரியான தலிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சரின் ஊழல் தடுப்பு ஹெல்ப்லைனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.