ஆளுநர் விரைவில் தமிழ்நாட்டில் இருந்தும் வெளியேறவேண்டியிருக்கும் – ஜோதிமணி எம்.பி
பாஜக ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியதைப் போல,விரைவில் தமிழ்நாட்டில் இருந்தும் வெளியேறவேண்டியிருக்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார் எனவும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாக ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு சுயமரியாதையின் நிலம். எங்கள் சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு எமது மண்ணில் இடமில்லை. பாஜக ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியதைப் போல,விரைவில் தமிழ்நாட்டில் இருந்தும் வெளியேறவேண்டியிருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.