அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல – அன்புமணி
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும், திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார் எனவும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசால் தயாரிக்க உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!
தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்!
அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!’ என தெரிவித்துள்ளார்.