ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் தான் காரணம் : எடப்பாடி பழனிசாமி ..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனே காரணம் என்று சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர், பேசிய அவர் தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தை, சட்டப்பேரவையில் காண்பித்தார்.
அதேபோல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், பேருந்துகளுக்கு தீவைப்பு தொடர்பான புகைப்படங்களையும் காண்பித்த அவர், ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். போராட்டத்தில் சில அரசியல் கட்சியினர் ஊடுருவியதாக கூறியது திமுகவினரைத் தான் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவே காரணம் என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாகவும் விமர்சித்தார்.