பொதுக்குழு கூட்ட பழனிசாமிக்கு அதிகாரமில்லை – ஓபிஎஸ் தரப்பு
பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான முடிவால் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லாமல் போகுமா? என உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை 3வது நாளாக இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, தனிப்பட்ட முறையில் பொதுக்குழு கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதம் முன்வைத்தார்.
5 ஆண்டுக்கு என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்த பின் பொதுக்குழு கூட்ட அதிகாரம் இல்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தற்போதைய நிலையை போலவே அன்றும் பிளவை சந்தித்தது அதிமுக. கட்சியின் நிர்வாகத்தை ஜெயலலிதா கையில் எடுத்த பின் சட்ட விதிகளின் படி அதிமுக தொடர்ந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான முடிவால் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லாமல் போகுமா?, கட்சியில் முடிவெடுக்க முட்டுக்கட்டை ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தை நாடினோம். இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட முடியாது என ஜூன் 28-ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். எனவே, ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகவில்லை என ஓபிஎஸ் தரப்பு வாதமாக உள்ளது.