அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது – அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக போட்டியிடும் என அண்ணாமலை தகவல்.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக போட்டியிட போவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரட்டை தலைமை சர்ச்சை நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வருகிறார். திமுகவை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் நாங்கள் தான் எதிர்க்கட்சி எனவும் அண்ணாமலை தெரிவித்து வருகிறார்.
எனவே, அதிமுகவும், பாஜகவுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் கூட்டணி யார் தலைமையில் அமையும் எனவும் கேள்வி எழுந்தது. மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்றும் பல்வேறு சந்தேகங்கள் எழ தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என இபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக போட்டியிடும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.