நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் – அன்புமணி ராமதாஸ்
விளைநிலங்களை காப்பாற்ற என்எல்சி நிறுவனத்தை கடலூரியில் இருந்து வெளியேற்ற கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
என்எல்சியை வெளியேற்ற கோரி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை, விளைநிலங்களை காப்பாற்ற என்எல்சி நிறுவனத்தை கடலூரியில் இருந்து வெளியேற்ற கோரி போராட்டம் நடைபெறும் என்றார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.
இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது என்பதை அரசும், மாவட்ட நிர்வாகமும் உணர வேண்டும். எனவே, கடலூர் மாவட்டத்தில் 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும் என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.