இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் ! கர்நாடகா அரசு.!
கர்நாடக அரசு, வீட்டிற்குள் தனிமைப்படுத்தி இருக்கும் முறையை சில வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாயமாக்குகிறது.
சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் பெருகிவருவதால், இந்தியாவில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் பரவிவரும் BF.7 துணை வேரியண்ட் மற்றும் புதிய சூப்பர் வேரியண்ட் XBB.1.5 இந்தியாவில் சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா அலையின் வேகங்களை குறைக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதனையடுத்து கர்நாடகா அரசு, சுய தனிமைப் படுத்தலை கட்டாயமாக்கியுள்ளது.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும், கர்நாடக அரசு வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கியுள்ளது. கடந்த வாரம், பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (கேஐஏ) டிசம்பரில் மொத்தம் 12 சர்வதேச பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர், அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், உணவகங்கள், பப்கள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருந்தது.